ADS

Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Tuesday, 9 July 2019

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்

குறளின் குரல் !
*********
" ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் "

பொருள் -
*********
அறிவுடையவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கின்ற முதலை இழந்து விடும் காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள், என்று, செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமான முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார், தெய்வப் புலவர் நம் திருவள்ளுவர்.

' இருக்கிறத  விட்டுட்டுப் பறக்கறதுக்கு ஆசைப் படக் கூடாது '

' லாபம் அதிகமாகக் கிடைக்கிறதே என்பதற்காக விதை நெல்லை விற்பவன் முட்டாள் '

' தினமும் ஒரு பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தால் அதிக முட்டைகளை உடனே அடையலாமே ' என்று ஆசைப்பட்டு, உள்ளதையும் இழந்தவன் கதையெல்லாம் நமக்குத் தெரியும் !

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

ஆசைக்கு முன்னுரிமை கொடுத்தால் அறிவு மங்கிவிடும், என்பதுதானே !

சுலபமாகப் பணம் சம்பாதிக்க என்ன வழி ?

ஒருவன் செய்திப் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தான்..
இவ்வாறு !

' நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா ? எனது முகவரிக்கு ஒரு ரூபாய் மணியார்டர் அனுப்பி வையுங்கள். அந்த இரகசியத்தைக் கூறுகிறேன் ' இதுதான் அந்த விளம்பரம்.
அவ்வளவுதான் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற பேராசையில் பணம் அனுப்பி வைத்தார்கள் !

இரண்டு நாட்கள் கழித்து அதே பத்திரிக்கையில் மற்றுமொரு விளம்பரம்..
' அன்பர்களே.. என் விளம்பரத்தைப் பார்த்து ஒரு கோடி பேர் எனக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைத்தார்கள். நான் இப்பொழுது கோடீஸ்வரன் ஆகி விட்டேன். இது தான் அந்த ரகசியம் ' என்று அந்த விளம்பரம்  இருந்ததாம்.
இது எப்படி இருக்கு ?

இந்தக் கதை அனைவருக்கும் தெரியும் என்றாலும்...
தெரிந்தும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைக்கும் ஆசையில் இருந்து இன்னும் யாரும் விடுபட வில்லையே ?

நாளைக்குக் கிடைக்கும் பிரியாணியை விட,  பசிக்கும் போதே கிடைக்கும் பழைய சோறு அமிழ்தமல்லவா ?

இந்த,
ஞானக்கண் திறக்க வேண்டும். இந் நாநிலத்தில் மனிதர்க்கெல்லாம்.. அறிவில்,
ஊனக்கண் படைத்தோரெல்லாம் உண்மையை உணர்ந்து நாளும் உள்ளத்தில் தெளிதல்
வேண்டும்.
கூன், குருடு, செவிடு நீங்கிய குறையில்லா பிறப்பே, நமக்கு இறைவன் கொடுத்த பெரிய லாபம் !
வான் புகழும்  வள்ளுவன் குறளால் அறிவில் வலிமை பெற்று உயர்ந்து வாழ்ந்து, வளமை பெற்றால் அதுவே போதும் !

நானும் கவிதை எழுதிப் பார்த்தேன்...

நன்றாயிருக்கிறதோ... இல்லையோ...?

நல்ல கருத்துக்களை உங்கள் உள்ளத்தில் சேர்த்தேன் !

அந்த மகிழ்ச்சியோடு...
இனிய காலை வணக்கம், நண்பர்களே !

மதுரை G.பாலு.
24-06-2019
திங்கட்கிழமை.

KURAL BY MADURAI BALU

அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

கடந்த  ஓராண்டு காலமாக...உயர் வள்ளுவம் தந்த  'குறளின் குரலை ' உங்களின் பொன்னான உள்ளத்தில் ஏற்று, என் எழுத்திற்கு உற்சாகம் அளித்து வந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !

குறள் கூறிய உன்னத கருத்துக்களை அறிந்து, புரிந்து படித்து வந்திருப்பீர்கள். என் அறிவிற்குட்பட்ட விஷயங்களை, நான் பார்த்த, படித்த, கேட்ட அனுபவங்களோடு உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

நான் எழுதிய கருத்துக்களில், குற்றம், குறைகள் இல்லாமல் இருக்காது !
எந்தத் தவற்றையும் எடுத்துக் காட்டாமல், நீங்கள் பொறுமையாகப் படித்து வந்தது உங்களின் உயர்ந்த உள்ளத்தைக்  காட்டுகிறது.

தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு !
தெரிந்தே தவறு செய்வது மனித இழிவு !

குறள் கூறும் அறிவுரைகளைப் பின் பற்றி அறவழியில் நடந்தால், நாம் மறந்தும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.

'மிக வலிமையான கருத்துக்களை உங்கள் முன் வைக்கவில்லை' என்றாலும், சொல்ல வந்த விஷயங்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்திருப்பேன் என நம்புகிறேன்.

எழுத்துலகிலும், இலக்கியப் படைப்புகளிலும் இமாலய சாதனைகளைப் படைத்த ஆற்றல் மிக்க 'ஜாம்பவான்கள் '  மத்தியில், இருக்கும் இடமே தெரியாமல், அறிவில் சிற்றெறும்பு போன்ற நிலையில் உள்ள நான், கற்றறிந்த விஷயங்களை  உங்களோடு மனம் திறந்து பகிர்ந்த கொண்டதைப் புனிதமான பணியாக நினைத்து, இது என் தாய்த் தமிழுக்கு நான் செய்த சிறு தொண்டாகக் கருதித் தமிழ்த் தாயின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன் !

தினந்தோறும் எழுதிவந்த ' குறளின் குரலுக்கு ' சற்று இடைவெளி விடுகிறேன் !

இறைவனின் அருளோடு, வள்ளுவரின் ஆசியோடு திரும்பவும் உங்களோடு பேச வருவேன்.

உங்களின் அன்பான ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி !

இனிய காலை வணக்கம், நண்பர்களே !

மதுரை G.பாலு.
25-06-2019
செவ்வாய்க் கிழமை.